• Breaking News

  கல்விப்பணி என்பது மிகவும் பொறுப்புவாய்ந்த பணியாகும்.

  (எம்.ஜே.எம்.சஜீத்)

  கல்விப்பணி என்பது மிகவும் பொறுப்புவாய்ந்த பணியாகும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சிறிய வயதில் பல எதிர்பார்ப்புடன் அதிபர், ஆசிரியர்களிடம் ஒப்படைக்கின்றனர். இம்மாணவர்களிடம் மறைந்து கிடக்கும் ஆளுமை திறன்களையும், தலமைத்துவ பண்புகளையும் அடையாளம் கண்டு சிறந்த நல்லொழுக்கமுள்ளவர்களாக மாற்றுவேதே கல்விப்பணியாகும் என அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய அதிபர் எம்.ஏ. அன்சார் தலமையில் நடைபெற்ற ' அறபாவின் ஆளுமைகள் ' என்ற பரிசளிப்பு விழாவில்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் முன்னாள் பிரதித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

  தொடர்ந்தும் உரையாற்றுகையில்....

  இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இறைவனின் நாட்டத்தினால் ஒவ்வொரு பதவிகளும், பொறுப்புகளு;ம வழங்கப்பட்டுள்ளன. ஆனால் கல்விப்பணி என்பது மிகவும் பெறுமதிமிக்க பணியாகும் இந்த உலகத்தில் வாழும் மனிதன் மரணித்து விட்டால் தனக்காக இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்யும் சாலிஹான பிள்ளைகள், சதகத்துல் ஜாரியா கிடைக்க கூடிய அமல்கள், பயனளிக்கும் கல்வி இந்த மூன்றுமே மரணித்த பின்பும் தொடர்ந்தும் நன்மைகளை பெற்றுததரும் விடயங்கள் என்பதனை நாம் மறந்து விட முடியாது.

  இந்த வகையில் நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அர்ப்பணிப்போடும், தியாக மனதோடும் செயல்பட்டு வரும் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகளை பாடசாலை சமூகம் வாழ்த்தி பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டியது பெற்றோர்களிள் கடமையாகும்.

  அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் நீண்ட காலமாக கல்வித்துறையில்  பாரிய வீழ்ச்சி அடைந்த நிலையில் இருந்தன. இக்கல்லூரியில் கவனமாக இருந்து கவலைப்பட்டு பிரார்த்தனை செய்த பாடசாலை சமூகம்  தொடர்ச்சியான பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இதனால் அதிபர் பதவியை சிறந்த முறையில் பாரம் எடுத்து தனது தலமைத்துவ ஆளுமையினால் அரசியல் தலைவர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரியர் குழாம், பாடசாலை சமூகம் என்பனவற்றை பயன்படுத்தி அறபா வித்தியாலயம் இன்று வலய, மாகாண மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை  பெறும் நிலமையை உருவாக்கி உள்ளார்.

  அதிபர், ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடும், தியாக மனப்பாங்கோடும் செயல்படும் போது தான் ஒவ்வொரு பாடசாலைகளும் வரலாற்று சான்றிதழ்களை பெறக்கூடிய நிலமை உருவாகிவருகிறது என்பது யதார்த்தமாகும்;. குறுகிய காலத்தில் மிகவும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு அறபாவின் சாதனைகளை உருவாக்கிய கல்வி தொடர்பான எல்லோரையும் இப்பிரதேச மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

  ஒரு காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளில் பௌதிக வளத்தட்டுபாடுகள், ஆசிரிய பற்றாக்குறைகள், தளபாட குறைபாடுகள் என்பன நீண்ட காலமாக நிலவி வந்தன. இக்குறைபாடுகளை தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவும், நானும் இணைந்து எங்களிடம் இருந்த அரசியல் அதிகாரத்தின் ஊடாக முடிந்த வரை எமது பிரதேச கல்வி பணிக்கு வாக்குகளை எதிர்பார்க்காது பணி புரிந்தோம். இதனால் எமது பிரதேசம் கல்வி துறையில் அறுவடைகளை பெற்றுக்கொண்டு இருகின்றது எனத்தெரிவித்தார்.

  இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.றகுமத்துல்லா மௌலவி, அட்டாளைச்சேனை பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி அல்-ஹாஜ். எம்.ஏ.சீ. கஸாலி, உதவிக் கல்விப் பணிப்பாளர் அம்ஜத்கான், அபுதாஹிர், ஆசிரியர்கள் பிரதேச சபை உறுப்பினர் ஜெமிலா ஹமீட் உட்பட பல பிரமுகர்களும்  கலந்து கொண்டனர்.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad