• Breaking News

    `அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கொடுத்தா போலீஸ் ஏற்கல!’- பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு


    சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் பூதாகரம் ஆகிவரும் நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ வெற்றிவேல் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ``அ.தி.மு.க. எம்.பி ஒருவருக்குத் தம்பி பாப்பா பிறந்திருக்கிறது. அந்த எம்.பி-யின் தந்தையும் பிரபல அரசியல் வி.ஐ.பிதான்'' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். யார் அந்த வி.ஐ.பி, அப்படி என்ன நடந்திருக்கும் என அரசியல் வட்டாரமும் மக்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். 

    இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (21.10.2018) ஓர் ஆடியோ வெளியாகிப் பரபரப்பை கிளப்பியது.  அந்த ஆடியோவில் உள்ள குரல் அமைச்சர் ஜெயக்குமாருடையது போன்று இருந்தது. இதையடுத்து, `அந்த ஆடியோவில் பேசும் ஆண் குரல் அமைச்சர் டி.ஜெயக்குமாருடையது’ என  சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.  குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், ``ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் அல்ல. அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர்’ என்று விளக்கம் கொடுத்தார். 

    அந்த சர்ச்சைக்குரிய ஆடியோவில்  ‘என் மகள் சிபாரிசுக்கு வந்திருந்தார். அவளைக் கர்ப்பமாக்கி விட்டீர்களே. என் மகளின் நிலை என்ன’ என ஒரு பெண் கூறுகிறார். அதற்கு எதிர்முனையில் பேசிய ஆண் குரல், ‘நேரில் வாங்க. பேசிக்கலாம்’ என்கிறார். இப்படியாக அந்த ஆடியோவில் பேசிக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.  குழந்தையின் பிறப்பு சான்றிதழும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் தந்தை பெயர் டி.ஜெயக்குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் சான்றிதழ் கடந்த ஆகஸ்ட் மாதம் பெறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் இப்போது ஏன் பூதாகரம் ஆனது என்று உங்களுக்குத் தோன்றலாம். அதற்கான காரணத்தையும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ வெற்றிவேல் முன்னரே கூறியிருக்கிறார்.  ` குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த அரசியல் வி.ஐ.பி, குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு, சொத்தில் பங்கு தர மறுக்கிறார். அதனால், அந்தத் தாய் இப்போது நிர்க்கதியாக நிற்கிறார். தாய்க்குச் சொத்தில் பங்கு தராவிட்டால், சம்பந்தப்பட்ட எம்.பி-யின் அப்பா பெயரை வெளியிடுவேன்’ என்று எச்சரிந்திருந்தார். இதையடுத்துதான் ஆடியோ வெளியாகி  `ஜெயக்குமார் தான் அந்த அரசியல் வி.ஐ.பி’ என்னும் செய்தி பரவியது.

    தன் மீதான குற்றச்சாட்டை ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்துவரும் நிலையில் அவர் மீது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    அந்தப் புகாரில்,  `மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தன்னிடம் சிபாரிசு கேட்டுச் சென்ற ஒரு பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டார். கர்ப்பத்தைக் கலைக்குமாறு பெண்ணை மிரட்டினார். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. டி.ஜெயக்குமார் பெயரில் குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, போலீஸார் அதை ஏற்கவில்லை. எனவே, அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய பெண்கள் ஆணையத்திடமும் அந்தப் பெண் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ்பாபு புகார் கொடுத்துள்ளார்.




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad