• Breaking News

  எல்லைநிர்ணய அறிக்கைத் தோல்வியும் எதிர்காலமும்.  வை எல் எஸ் ஹமீட்


  எல்லைநிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோல்வியடைந்ததனால் எல்லாம் சரியாகிவிட்டது; என்பது பொருளல்ல. அடுத்ததாக சபாநாயகர், பிரதமர் தலைமையில் ஐவர் கொண்ட மீளாய்வுக்குழுவை நியமிக்க வேண்டும்.அவர்கள் இரண்டு மாத்ததிற்குள் இந்த அறிக்கையில் செய்யவேண்டிய திருத்தங்களைச் செய்து ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து அவர் அதனை வர்த்தமானி மூலம் பிரகடன்படுத்துவார். அதன்பின் மிகுதி தேர்தல் ஆணைக்குழுவின் கையில்.  இதைத்தான் இன்னும் அமைச்சர் பைசர் முஸ்தபா பேசிவருகின்றார். எனவே, அவசரமாக செய்யவேண்டியது பழைய தேர்தல்முறைக்கு செல்வதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டுவருவது.  எல்லைநிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படாதவரை ஒரு ஆறுதல் இருந்தது. இப்பொழுது எஞ்சியிருப்பது இரு மாதமே. வேண்டுமானால் சற்று இழுத்தடிக்கலாம். ஆனாலும் நீண்டகாலம் அதனைச் செய்யமுடியாது.  எல்லைநிர்ணய அறிக்கைத் தோல்விக்கு உரிமைகோரல்
  ———————————————————
  இந்த எல்லைநிர்ணய அறிக்கைத் தோல்விக்கு ஒரு முஸ்லிம்கட்சியின் தலைவரே காரணம்; என ஒரு தரப்பு உரிமைகோர அதை அடுத்த தரப்பு மறுதலிக்கின்ற பதிவுகள் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.  விமர்சனங்கள் சாதகமானதோ, பாதகமானதோ அதனை நேர்மையுடன் செய்யவேண்டும். அதற்கும்
  மறுமையில் கேள்வியுண்டு. நீங்கள் யாருக்காக இவ்வளவு எழுதுகின்றீர்களோ இவர்கள் யாரும் உங்களுக்கு நன்றிசெலுத்தப் போவதில்லை. நன்றி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாத ஒரு துறைதான் அரசியல். நேர்மையாக செய்தால் மறுமையில் அதற்கு கூலி உண்டு.  இந்த அறிக்கைக்கெதிராக அனைத்துத் தரப்பும் வாக்களித்தது. இதனை ஆதரித்த ஜே வி பி கூட வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதனை ஆதரித்த ஜனாதிபதி தரப்பும் எதிர்த்து வாக்களித்தது. ஏன்?  ஐ தே கட்சி
  ——————
  ஐ தே க எதிர்த்து வாக்களித்தற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் சிறுபான்மைக் கட்சிகள் எதிர்த்தது ஒரு பிரதான காரணம்; என்பதை மறுக்கமுடியாது.  கூட்டு எதிர்க்கட்சி
  ————————-
  வெள்ளிக்கிழமை அறிக்கை நிறைவேற்றப்பட்டிருந்தால் இப்பொழுது விடயம் தேர்தல் ஆணைக்குழுவின் கைகளில் இருந்திருக்கும். தேர்தலை அவசரமாக கோருகின்ற கூட்டு எதிர்க்கட்சி ஏன் எதிர்த்து வாக்களித்தது.  ஐ தே க எதிர்த்து வாக்களித்தால் 2/3 பெரும்பான்மை பெறமுடியாது; எனவே நாமும் எதிர்ப்போம் என்பதனாலா? அதனால் என்ன லாபம். தோல்வியடைந்தாலும் தேர்தலை அவசரமாக நடாத்துவதற்கு உடன்பாடு; என்ற செய்தியைச் சொல்லியிருக்குமே! எதிர்த்து வாக்களித்ததால் தேர்தல் இன்னும் சற்று இழுபடுவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றார்களே! ஏன்?  சிறுபான்மைக்கு முழுக்க முழுக்க எதிரானது; என்ற பொதுக்கருத்து ஏற்பட்டதன்பின் ஆதரித்தால் அது சிறுபான்மையை ஓட்டுமொத்தமாக எதிர்ப்பதாகிவிடும்; என்பது ஒரு பிரதான காரணமாக இருக்க வாய்ப்பிருக்கின்றதல்லவா?  ஜனாதிபதி தரப்பு
  ————————
  எல்லோரும் எதிர்க்கும்போது நாம் மட்டும் ஆதரித்து நிறைவேற்றவும் முடியாது; மறுபுறம் சிறுபான்மை பகைக்கவேண்டும்; என்பதைத்தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும்.  ஜே வி பி
  ————-
  பகிரங்கமாகவே இத்தேர்தல்முறையை ஆதரித்துவந்தவர்கள். கொள்கைவாதிகள். அவர்கள் ஏன் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆதரிக்கின்றோம் என்ற கொள்கையையாவது வெளிப்படுத்தியிருக்கலாமே!  நிச்சயமாக நாம் மட்டும் ஆதரித்து சிறுபான்மைக்கு எதிரானவர்களாக ஏன் முத்திரை குத்திக்கொள்ள வேண்டும்; என்பதைத்தவிர வேறு என்ன காரணங்கள் இருக்கமுடியும்?  இது சாத்தியமானதெப்படி?
  ———————————
  இந்த அறிக்கை சிறுபான்மைக்கெதிரானது; என்ற கருத்தியலைக் கட்டியெழுப்புவதில் சகல சிறுபான்மைக் கட்சிகளும் பங்களிப்புச் செய்திருக்கின்றன. ஊடகங்களும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. ஆனால் “ பொன்னான விளக்கென்றாலும் அதற்கு ஒரு தூண்டுகோல் வேண்டும்” என்பார்கள். அதுபோல் இந்தத்தேசியக்கட்சிகளை இதற்கு இணங்கவைப்பதில் முழுமூச்சாக செயற்பட்டவர்கள் யார்? என்பதும் இங்கு முக்கியமானது.  அந்தவகையில் அமைச்சர் ஹக்கீமும் அமைச்சர் மனோகணேசனும் பாராட்டப்படவேண்டியவர்கள். 139 வாக்குகள் எதிர்த்து அளிக்கப்பட்டதற்கு அவர்களே காரணம்; என்பது முழுமையல்ல. ஆனால் இதனைச் சாத்தியப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பு அபாரமானது.  இந்தக் கட்டுரையின் நோக்கம்
  ——————————————
  பழையமுறையில் தேர்தல் நடாத்த அவசரமாக திருத்தச் சட்டம் கொண்டுவரவேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டுவதும் ஒரு நோக்கம்தான். ஆனால் அதுதான் பிரதான நோக்கமல்ல. ஏனெனில் இந்த அமைச்சர்களுக்கு அதுதெரியும்.  பிரதான நோக்கம் அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு இந்த சமூகத்தின் சார்பில் ஒரு அடிப்படை விடயத்தை சுட்டிக்காட்டுவது.  இந்த புதிய தேர்தல்முறையினால் சமூகம் பாதிக்கப்படுகின்ற அதேவேளை அவரது கட்சியும் கடுமையாக பாதிக்கப்படப்போகின்றது. அது அவரது இருப்புடன் சம்பந்தப்பட்டது. இதற்கு கையுயர்த்தும்போது அவர் இந்த தேர்தல் முறையைப் புரிந்திருக்கவில்லை. அதனால்தான் 60:40ஐ 50:50 ஆக ஆக்கமுற்பட்டதும் அதைப்பற்றிப் பெருமைப்பட்டதும்.  இத்தேர்தல்முறையின் உண்மையான தாற்பரியத்தை உள்ளூராட்சித் தேர்தலின்பின்தான் புரிந்துகொண்டார். அதன்பின் அவர் எடுத்துக்கொண்ட முயற்சி இதனை தோல்வியடையச் செயவதில் பெரும் பங்களிப்புச் செய்திருக்கின்றது.  சுட்டிக்காட்டும் விடயம்
  ———————————
  சமூகத்தின் இருப்பு என்பது ஒருபுறமிருக்க, உங்களின் அடிப்படை இருப்பு பாதிக்கப்படும்போது இவ்வளவு வேகமாக உங்களால் செயற்பட முடியுமென்றால் இதே வேகத்தை சமூகத்தின் ஏனைய விடயங்களிலும் நீங்கள் காட்டியிருந்தால் முஸ்லிம்களுக்கு பல கட்சிகள் தேவை என்ற சூழ்நிலையே எழுந்திருக்காதே!  பலவீனமான அரசு
  ————————
  வரலாற்றிலே இவ்வளவு பலவீனமான அரசு இலங்கையில் இருக்கவில்லை. இந்தப் பலவீனமான அரசின் பலமே நாம்தான். இந்த அரசைப் பாவித்து எமது எவ்வளவு பிரச்சினைகளைத் தீர்த்திருக்கலாம்.  தழிழ்த்தரப்பைப் பாருங்கள். இந்தப் அரசின் பலவீனத்திற்குள் விளையாடியே 80% மான இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணியையே மீட்டுவிட்டார்களே! திருகோணமலை மாவட்டத்தில் நமது பள்ளிவாசலையும் சேர்தல்லவா நமது காணியை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. அதையாவது மீட்கமுடிந்ததா?  கடந்த 18 வருடங்களாக கல்முனை புதியநகர் அபிவிருத்திபற்றிப் பேசுகிறீர்கள். கடந்த தேர்தலில் ‘ கல்முனை அபிவிருத்தி அதிகாரசபை’ என்றொரு நிறுவனத்தை உருவாக்கி கல்முனையை அபிவிருத்தி செய்யப்போவதாக பிரதமரைக் கொண்டுவந்து சொல்லவைத்தீர்கள். ஆட்சியின் பாதிக்காலம் சென்றுவிட்டது. எங்கே அந்த அபிவிருத்தி அதிகாரசபை?  நகரத் திட்டமிடல் அமைச்சு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக உங்களிடமே இருக்கின்றது. கல்முனை புதிய நகரத்திற்கு ஒரு பிடி மண்ணாவது போடப்பட்டதா? இல்லையே! ஏன்? வருடாவருடம் அந்த அமைச்சுக்கு வருகின்ற பணம் செலவழிக்கப்படாமல் திரும்பிச் செல்கின்ற கதைதான் கேள்விப்படுகின்றோம்.  உங்கள் கைகளில் இருக்கின்ற அமைச்சுமூலமாக செய்யக்கூடியவற்றைக்கூட செய்யாமல் இருக்கின்றீர்களே! ஏன்? இது உங்கள் இயலாமை என்று கூறமுடியாது. உங்கள் இருப்பு பாதிக்கப்படுகின்றபோது இவ்வளவு வேகமாக செயற்படுகின்ற நீங்கள் சமூக விடயத்தில் ஏன் இவ்வாறு இருக்கின்றீர்கள். உங்கள் இருப்பு பாதிக்கப்படாது. ஏமாந்த அந்த மக்கள் எப்படியும் வாக்களிப்பார்கள் என்பது காரணமா?  ஒன்றுமட்டும் உண்மை. நீங்கள் எதுவும் செய்யாமல் இருப்பதற்கு காரணம் உங்கள் இயலாமையல்ல. உங்கள் மனோநிலை. உங்களிடம் வந்து பணத்தைப் பிடுங்கிக்கொண்டுவந்து அபிவிருத்திகளைச் செய்யக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களையாவது அந்த மக்கள் பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கினீர்களா? உங்கள் அரசியலுக்குள்ளும் ஒரு பெரும் சூதாட்டம் இருக்கின்றதல்லவா?  தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
  —————————————————————
  நீங்கள் மறைமுக சூதாட்ட அரசியல்செய்தால் வெளிப்படையாகவே அதனைச் செய்கிறோம்; என்கிறார்கள் உங்கள் பின்னோர்கள். உங்களிடம் அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சு இருந்தும் ஆனபலன் ஏதும் இல்லை. நாலுவருடங்களாக ‘ கல்முனை அபிவிருத்தி அதிகார சபை’ யையே அமைக்கமுடியாமல் இருக்கிறீர்கள்.  பின்னையவர்கள் எங்களுக்கு அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சே தேவையில்லை. அடியாட்களை வைத்து முகநூலிலே அபிவிருத்தி செய்வோம் என்கிறார்கள்.  இன்று பாருங்கள். அல்லல்பட்ட வடபுலத்து மக்கள். யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தமாகப் போகின்றது. முசலியில் உயர்கல்வி நிறுவனம் அமைக்க பிரதமரிடம் கடன்கேட்டு கடிதம் எழுதுகிறார் ஒரு முசலி சகோதரர். அதுதான் அங்கு நிலைமை.  பறிகொடுத்த காணிமீட்கப்படவில்லை. பாதிப்பேருக்குமேல் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. சிலாபத்துறை வைத்தியசாலையின் நிலை பரிதாபம். கல்வியில் ஒரு காலத்தில் கோலோச்சிய வடபுல முஸ்லிம்கள் இன்று ஒரு உயர்கல்வி நிறுவனத்தைக் கட்டுவதற்கு கடனாவது தாருங்கள் என்று பிரதமரிடம் கேட்கின்றார்கள்; என்றால் அவர்களின் கல்வித்தாகத்தைச் சிந்தியுங்கள். ஆனால் முகநூலில் அபிவிருத்தி தாண்டவமாடுகிறது.  சிலர் உழைத்து வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருக்கின்ற பணத்தின் பாதிப்பங்குகூட மொத்த வன்னி முஸ்லிம்களுக்கும் கடந்த பத்து ஆண்டுகள் செலவளிக்கப்படவில்லை; என்று கூறப்படுகிறது.  தனிநபர்கள் வாழ்வதற்காக ஒரு சமூகமா?
  எனவே, எஞ்சியிருக்கின்ற இந்த ஆட்சிகாலப்பகுதியையாவது இந்த சமூகத்திற்காக பயன்படுத்துங்கள்; அமைச்சர் அவர்களே!  இந்த மக்கள் பாவம். நீங்களும் ஒன்றும் செய்யாவிட்டால், உங்களைக் குறைகூறி அரசியல் செய்யவந்தவர்கள் உங்களையே விழுங்கி ஏப்பம் விடுமளவு இருந்தால் இந்த மக்களின் நிலையென்ன?


  எனவே, உங்களுக்கு வாக்களித்த இந்த மக்களை வஞ்சிக்காதீர்கள். இந்த விடயத்தில் நீங்கள் செயற்பட்ட அதேவேகத்தில் ஏனைய விடயங்களிலும் செயல்படுங்கள். இந்த துன்யா நிரந்தமானதல்ல; என்பதை மனதிற்கொள்ளுங்கள். நன்றி.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad