Breaking

Wednesday

சவூதி அரேபியாவில் சினிமா திரையிட திடீர் அனுமதி ஏன்?


முப்பத்து ஐந்து வருடங்களில் முதன்முறையாக சௌதி அரேபியாவில் சினிமா திரையிடப்படவிருக்கிறது. பிளாக்பாந்தர் திரைப்படம் முதல் சினிமாவாக திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. பல தசாப்தங்கள் தடைக்கு பிறகு திடீரென திரைப்படத்துக்கு சௌதி அனுமதி வழங்கியது ஏன்?

சினிமா மீதான தடையை முடிவுக்கு கொண்டுவரும் சௌதி அரேபியாவின் முடிவானது அங்குள்ள சமூகத்தில் கொண்டு வரப்படும் மிகப்பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாகும்.

20-ஆவது நூற்றாண்டில் சௌதியை ஆண்ட ராஜ வம்சமானது ஆட்சிக்கு இரண்டு மூல ஆதாரங்களையே நம்பியிருந்தது. குவிந்துகிடக்கும் எண்ணெய் வளம் முதல் ஆதாரம். பழமைவாத மத குருமார்களுடனான முறைசாரா ஒப்பந்தம் இரண்டாவது ஆதாரமாக இருந்தது.

ஆனால், இப்போது 21-ஆவது நூற்றாண்டில் அரசை நடத்துவதற்கான செலவையும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் எண்ணெய் வளத்தை மட்டும் சௌதி நம்பமுடியாது. மேலும், அரச குடும்பத்தில் புதிய தலைவர்களுடன் மத குருமார்களால் போதிய செல்வாக்கு செலுத்த இயலவில்லை.

மற்ற மத்திய கிழக்கு நாடுகளைப் போலவே, சௌதி அரேபியா மிகப்பெரியளவில் இளைஞர் பட்டாளத்தை கொண்டிருக்கிறது. அந்நாட்டில் உள்ள 32 மில்லியன் மக்களில் பெரும்பாலோனோர் 30 வயதுக்குட்பட்டோராவர்.

மக்கள்தொகையில் பெரும்பான்மையான இளைஞர்களுடன் தொடர்பில் இருக்க தனது இளைய மகனான 32 வயது முகமது பின் சல்மானை இளவரசராக்கினார் சௌதி அரசர் சல்மான். ஆனால் இளைஞர்களை கவர்வது கடினமான செயல் என்பது முகமது பின் சல்மானுக்கும் தெரியும்.

எண்ணெய் சார்ந்த பொருளாதாரம் குறையவுள்ளதை இன்னும் இளவரசர் முழுமையாக பார்க்கக்வேண்டிய காலம் உள்ளது. சௌதியில் தற்போதைய தலைமுறையினர் தங்களது பெற்றோர்கள் வாழ்ந்த அதே வாழ்க்கைத்தரத்தை முழுமையாக விரும்பாமல் இருக்கக்கூடும்.

அரசுவேலைக்கான உத்தரவாதம் அவர்களுக்கு இல்லை. மேலும் அவர்கள் தனியார் துறையில் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கலாம். அங்கு வீட்டுக்கு செலவிடும் தொகை அதிகமாக இருப்பது அடிக்கடி சொல்லப்படும் புகார் . அதேவேளையில் மருத்துவதுறை மற்றும் கல்வித்துறை ஆகியவையும் தனியார்மயமாக்கப்பட துவங்கியிருக்கிறது.

சௌதி அரேபியா அதன் மக்கள்தொகையை சமாளித்து ஆட்சி நடத்துவதற்கு பொருளாதார ரீதியில் சில முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டும். அதற்குச் சில சலுகைகளை நிறுத்த நேரிடும் என மேற்குலகின் அரசியல் நோக்காளர்கள் கருதுகின்றனர்.

இது நடந்தால் சௌதியில் அரசியல் உரிமைகளில் அழுத்தம் ஏற்படலாம். ஆனால் முகமது பின் சல்மான் இந்த விஷயத்தில் வித்தியாசமான மாதிரியை வழங்கியுள்ளார்.

''கடினமாக உழையுங்கள்; அமைப்பை விமர்சிக்காதீர்கள் ஆனால் நிறைய வேடிக்கையான விஷயங்களை அனுபவித்துச் செய்யுங்கள்'' என இளவரசர் கூறுகிறார்.

பக்கத்துநாடான துபாயைப் போல அரசியல் சுதந்திரத்தை விட குறிப்பிட்ட அளவு சமூக சுதந்திரத்தை அளிக்கிறார் இளவரசர் சல்மான்.

சினிமா திரையிடுவது என்பது இதன் ஒரு பகுதியே.
ஆனால் சௌதி மக்கள் தாராளவாத சமூகத்தை உண்மையாகவே விரும்புகிறார்களா?

சௌதி அரேபியாவில் சமூக நடத்தையானது முற்றிலும் பல்வேறு வகைப்பட்டது. பெரும் பரப்பில் மாறுபட்ட வாழ்க்கை அனுபவம் மற்றும் வேறுபட்ட ஊதிய அளவு ஆகியவற்றுடன் மக்கள் முழுவதுமாக பரவியுள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான சௌதியினர் தற்போது அயல்நாட்டில் படிக்கின்றனர் அதேவேளையில் மற்றவர்கள் மிகவும் பாரம்பரிய கலாசாரத்தில் மூழ்கியுள்ளனர்.

பெண்களின் படிப்பு, பயணம், வேலை ஆகியவை அவர்களது ஆண் காப்பாளர்களான அப்பா, கணவன் (திருமணமான பின்) ஆகியோரால் நிர்ணயிக்கப்படுகின்றன. பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை அரசு நீக்கியது, திரைப்படங்கள் மற்றும் இசை கச்சேரியை ஊக்குவித்தல் போன்றவற்றை சௌதி அரசு செய்வதையடுத்து அங்கு மாற்றத்தின் வேகம் குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. குறிப்பாக பெண்கள் உரிமை தொடர்பாக வரும்போது விவாதங்கள் சூடு பிடிக்கின்றன.

சினிமா விஷயத்துக்கு வருவோம். தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் சினிமா மீதான தடை அபத்தமானது. 2014-ல் வந்த ஒரு ஆய்வறிக்கையில் சௌதியில் இணையத்தை பயன்படுத்திடும் மூன்றில் இரண்டு பேர் வாரத்துக்கு ஒரு திரைப்படமாவது பார்க்கிறார்கள் என்றது. தற்போது சவுதியில் 10-ல் ஒன்பது பேர் திறன்பேசி வைத்துள்ளனர்.

பஹ்ரைன் அல்லது துபாய்க்கு விமானத்தில் செல்லத் தேவையான தொகையை வைத்திருப்பவர்கள் அங்கே சென்றபின்னர் திரையரங்கிற்குச் செல்கின்றனர்.

அந்நாட்டு அரசு விமானமான சௌதி ஏர்வேஸ் தங்களது விமானத்துக்குள் திரைப்படங்களை திரையிடுகிறது எனினும் ஆயுதங்கள் மற்றும் மது கோப்பைகள் போன்ற பொருள்கள் திரைப்படத்தில் இடம்பெற்றால் அந்தப் காட்சிகள் வரும்போது குறிப்பிட்ட பொருள்களின் தரம் கடுமையாக மழுங்கடிக்கப்பட்டு காட்டப்படும்.

மேலும் சௌதியில் ஆங்காங்கே தற்காலிக திரையரங்கு மாதிரி அமைக்கப்பட்டு திரைப்பட திருவிழாக்களும் நடத்தப்பட்டுள்ளன.

சில சௌதி திரைப்படம் எடுக்கத் துவங்கியுள்ளனர். வட்ஜ்டா எனும் சவூதி திரைப்படம் கேன்ஸ் திரைப்படவிழாவில் விருது வென்றது. பரகா மீட்ஸ் பரகா எனும் சவூதி திரைப்படம் காதல் நகைச்சுவை பிரிவைச் சேர்ந்ததாகும்.

2017-ல் சவூதியினர் பொழுதுபோக்குக்கு மற்றும் விருந்தோம்பலுக்கு மத்திய கிழக்கு பகுதியில் 30 பில்லியன் டாலர் செலவழித்ததாக அரசாங்க அமைப்பு கூறுகிறது. இது சவூதியின் உள்நாடு உற்பத்தியில் 5% ஆகும்.

எண்ணெய் வளம் குறைந்துவரும் நிலையில், பொருளாதார மேம்பாட்டுக்கான புதிய துறையை சௌதி தேடிவருகையில் பொழுதுபோக்கு துறையை திறந்துவிடுவதால் சவூதியினர் பொழுதுபோக்குக்காக செலவழிக்கும் தொகை உள்நாட்டுக்கு திரும்பும் என்றும், மேலும் இவை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என பொருளாதாரம் சார்ந்த விவாதங்கள் அங்கே நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், முதல் திரையரங்கு சவூதி அரேபியாவில் திறக்கப்படவுள்ளது. அரசாங்கம் திரையரங்குக்கு மட்டும் அனுமதிக்கவில்லை, அதன் மூலம் வருமானமீட்ட முடியும் என நம்புகிறது.

சௌதி சினிமா விஷயத்தில் ''ஏன் இப்போது ?'' என்ற கேள்வியை கேட்பதற்கு பதிலாக ''ஏன் இவ்வளவு தாமதமானது?'' என்பதாக உங்கள் கேள்வி இருக்கவேண்டும்.

ஆனால் சினிமா மீதான தடை குறித்த விஷயம் வெறுமனே பொதுமக்கள் கருத்து சம்பந்தமானது அல்ல. பழைமைவாத சமூக திட்டம் என்பது செல்வாக்கு செலுத்திய மதகுருமார்களை சமாதானப்படுத்தும் ஒரு பகுதியாக இருந்தது.


தற்போது இந்த மதகுருமார்களின் அரசியல் மற்றும் சமூக வாழ்வுக்கான பங்களிப்பு மாறிவருகிறது. ஆம். தற்போது அரசால் நியமிக்கப்பட்ட மதகுருமார்கள் பழைமைவாத கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஆனால் அரசியல் தலைவர்களின் முடிவை அவர்கள் காலங்கடத்துகிறார்கள்.

2017-ஆம் ஆண்டு உயர்தலைமை முப்ஃதி பேசுகையில் சினிமா ஒளிபரப்புவது ''வெட்கமில்லாத மற்றும் ஒழுக்கக்கேடான விஷயம்'' என கூறினார். மேலும் சினிமா பாலின கலப்புகளை ஊக்குவிக்கும் என்றார்.

அவரது கருத்து ஒரு காலத்தில் விவாதத்தை கிளப்பியது ஆனால் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.

சௌதி கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே சமூகத்தின் ஒப்புதல் வாங்குவதற்கும் ஆட்சியாளர்களுக்கு ஏற்றவர்களாகவும் மத குருமார்கள் இருந்திருக்கிறார்கள்.

தற்போதைய அரசு தலைமையானது, அதிகாரம் பெற்ற மதகுருமார்கள் அரசியல் ரீதியாக ஆபத்தானவர்களாக இருக்கலாம் என கருதுகிறது. அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளை ஈர்க்கலாம் அல்லது அரசியல் அதிகார பகிர்வுக்கான அமைதியான கோரிக்கைகளை முன்வைப்பவர்களாக இருக்கலாம் என கருதுகிறது.

இம்மதகுருமார்கள் முன்பை விட தற்போது குறைந்த அதிகாரம் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களாக இருப்பார்கள் என அரசு சமிக்கை காட்டியுள்ளது.

இந்த வாரம் ரியாத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு ஆகியவை அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களில் நடக்கும் ஆழமான மாறுதல்களை வெளிப்படுத்தும்.

இந்த அலசல் கட்டுரையானது பிபிசிக்கு வெளியே ஒரு நிறுவனத்தில் வேலைசெய்யும் ஒரு வல்லுனரிடம் இருந்து பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

(ஜீன் கின்னின்மோன்ட் ஒரு மூத்த ஆராய்ச்சியாளர். மேலும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க ஆகியவற்றின் சத்தாம் ஹவுசின் துணைத் தலைவர். சத்தாம் ஹவுஸ் தன்னை சுயாதீன கொள்கை நிறுவனமாக விவரித்துக் கொள்கிறது.)
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog