Breaking

Monday

கண்டியும் வேண்டாம் : வன்னியும் வேண்டாம் : பதாதைகள்! இன்று சாய்ந்தமருதில் பூரண கடையடைப்பு....!


(காரைதீவு நிருபர் சகா)

சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேசசபையை வென்றெடுக்குமுகமாக சமுக பொதுநலஅமைப்புகளால் முன்னெடுக்கப்படும் 3நாள் கடையடைப்பு
சத்தியாக்கிரகப்பேராட்டம்  இன்று (30) திங்கட்கிழமை வெற்றிகரமாக
ஆரம்பமாகியது.

இன்றிலிருந்து (30) தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு அதாவது  புதன்கிழமை(1)
வரை சாய்ந்தமருதில் முழுமையான கடையடைப்புப்போராட்டம் நடைபெறவுள்ளது. தினமும் மக்கள் எழுச்சிப்பொதுக்கூட்டமும் மக்கள் பேராட்டமும் இடம்பெறுமென பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஹனிபா மாஸ்டர் தெரிவித்தார்.

சாய்நதமருது பள்ளிவாசல் முன் அமைக்கப்பட்டுள்ள பாரிய கூடாரத்தில் பல
முக்கியபிரமுகர்கள் அமர்ந்து தொடர்ச்சியான சத்தியாக்கிரகப்பேராட்டத்திலீடுபட்டுள்ளனர். பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியின் முன்னாலும் பொதுமக்கள்
சத்தியாக்கிரகப்போராட்டத்திலீடுபட்டுள்ளனர்.

பள்ளிவாசலில் ஒரே சனக்கூட்டம். பள்ளிவாசல் முன்றலில் அடுப்புமூட்டி
தண்ணீர்ப்பாணை ஓன்று கொதித்தவண்ணம் காணப்பட்டது. பலவித பதாதைகளும் பள்ளிவாசல் முன் தொங்கிவிடப்பட்டுள்ளன.

சாய்ந்தமருதெங்கும் கறுப்புநிறக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. அதேவேளை பல சுலோகங்கள் தாங்கிய  பதாதைகள் பரவலாக தொங்கவிடப்பட்டிருந்தன. கண்டியும் வேண்டாம் : வன்னியும் வேண்டாம் உள்ளுர்த்தம்பியும் வேண்டாம் அயலூர்க்குதிரையும் வேண்டாம் எல்லோரும் துரோகிகளே' என்ற பதாதை பலரதும் கவனத்தை ஈர்த்தது.

உள்ளூராட்சி அமைச்சரே!எல்லைப்பிரச்சினை எதுவுமில்லாத எமக்கு
உள்ளுராட்சிசபையை வழங்கு! இப்படி பல சுலோகங்களடங்கிய பதாதைகள் பல இடங்களில் கட்டப்பட்டுள்ளன.

நான்கு பிரிப்பு என்பது சூழ்ச்சி : இனியும் ஏமாறவேண்டாம் : துரோகிகளை
துரத்தியடிப்போம் : தனியாக பிரிவதே தனித்துவமான தீர்வு என்ற சுவரொட்டியை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் ஒட்டியுள்ளது..

அதன்காரணமாக இன்று சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள சகல கடைகளும் பூட்டப்படிருந்தன. எந்தவொரு கடையும் திறக்கப்படவில்லை. அனைத்தும் இழுத்துமூடப்படிட்டிருந்தன.
பாடசாலைகள் மாணவர் வரவின்மையால் வெறிச்சொடிக்காணப்பட்டன. ஆக ஆசிரியர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தனர். வங்கிகள் பூட்டப்பட்டிருந்தன. சந்தை இயங்கவில்லை.

சாய்ந்தமருது மாளிகைக்காடு  பள்ளிவாசல் தொடர்ச்சியாக நடாத்திய
ஆலோசனைக்கூட்டத்தில் இம்முடிவு ஏலவே எடுக்கப்பட்டிருந்தது.

அதனை பொதுமக்களுக்கு விளங்கப்படுத்துமுகமாக நேற்று இரவு(29) பகிரங்கப் பொதுக்கூட்டம் பள்ளிவாசல் தலைவர் அலஹாஜ் ஹனிபா மாஸ்டர் தலைமையில் நடைபெற்றது.பல பொதுப்பிரமுகர்கள் சமகால நிலைமையை விளக்கி உரையாற்றினார்கள்.

வீதிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டிருந்தார்கள். சுமார் 3மணிநேரம்
இடம்பெற்ற இத் தெளிவுபடுத்தும் கூட்டத்தில் இன்றைய கடையடைப்பு பற்றி
விரிவாக சொல்லப்பட்டது. கல்முனையை நான்காகப் பிரிப்பதற்கும் அக்குழுவினருக்கும் நாம் உடன்பாடில்லை என்ற கருத்தில் பேச்சுக்கள் இடம்பெற்றன. அதுமட்டுமல்லாமல் தனியானபிரதேசசபை அந்தஸ்து கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும் கூறப்பட்டது.

சாய்ந்தமருதுப் பொதுமக்கள் கட்சிபேதம் மறந்து அனைவரும் ஒருமித்து
இதுவிடயத்தில் முழுமூச்சாகச் செயற்படுவதைக்காணக்கூடியதாயுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog