Breaking

Friday

புல்லட் ரெயில் திட்டத்தை ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயும், பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாக தொடங்கி வைத்தனர்.bullet train project.


ஆமதாபாத்,

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கனவுத்திட்டங்களில் ஒன்றாக அதிவேக புல்லட் ரெயில் இயக்கமும் இருந்து வருகிறது. இதற்காக ஜப்பான் அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பயனாக இந்தியாவின் புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவி அளிக்க அந்த நாடு முன்வந்தது.

அதன்படி முதற்கட்டமாக குஜராத்தின் ஆமதாபாத்- மும்பை இடையே புல்லட் ரெயில் இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டம் இறுதி செய்யப்பட்டது. நாட்டிலேயே முதல்முறையாக அமல் படுத்தப்படும் இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று குஜராத் மாநிலம் சபர்மதியில் உள்ள தடகள மைதானத்தில் நடந்தது.

தொடங்கி வைத்தனர்

இதில் பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி திட்டத்தை தொடங்கி வைத்தனர். மேலும் வதோதரா அருகே அமைய உள்ள புல்லட் ரெயில் திட்ட பயிற்சி நிறுவனத்துக்கான அடிக்கல்லையும் இரு தலைவர்களும் நாட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறியதாவது:-

தொலைநோக்கு பார்வை

ஒரு வலுவான இந்தியாவே ஜப்பானின் நோக்கம். அதைப்போல வலுவான ஜப்பானே இந்தியாவின் எண்ணமும் கூட. எனது நல்ல நண்பரான மோடி, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்.

இந்தியாவுக்கு புல்லட் ரெயிலை கொண்டு வந்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு முன் அவர் முடிவு எடுத்தார். அதற்கான திட்டத்தை இன்று தொடங்கி உள்ளோம்.

சில ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நான் இந்தியா வரும்போது புல்லட் ரெயிலின் ஜன்னல் வழியாக இந்தியாவின் இயற்கை எழிலை பார்ப்பேன் என நம்புகிறேன்.

இவ்வாறு ஷின்ஜோ அபே கூறினார்.

ஜப்பானின் மிகப்பெரும் பரிசு

பின்னர் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, புல்லட் ரெயில் திட்டம் தொடங்கப்பட்டதற்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

மும்பை-ஆமதாபாத் இடையிலான இந்த புல்லட் ரெயில் திட்டத்துக்கு, ஒரு நண்பனாக ஜப்பான் அரசு ரூ.88 ஆயிரம் கோடியை 0.1 சதவீத வட்டியில் வழங்குகிறது. அந்தவகையில் புல்லட் ரெயில் திட்டம், இந்தியாவுக்கு ஜப்பான் அளித்திருக்கும் மிகப்பெரிய பரிசு ஆகும்.

கடந்த 1964-ம் ஆண்டு ஜப்பான் தொடங்கிய இந்த தொழில்நுட்பம் இன்று 15 நாடுகளில் உள்ளது. ஐரோப்பாவில் இருந்து சீனா வரை புல்லட் ரெயில் தொடர்பான படங்களை எங்கும் காணமுடியும்.

தைரியமான நடவடிக்கை

புல்லட் ரெயில் திட்டம் குறித்து நான் முன்பு கூறிய போது, நடக்காததை பற்றி கூறுவதாக எதிர்க்கட்சிகள் குறை கூறின. ஆனால் தற்போது அது நிஜமாகி இருக்கும் போது, இது தேவையா? என்கின்றனர்.

ஆனால் வேகத்தை அதிகரிக்கக்கூடிய அதிவேக இணைப்புகள், தொலைவு குறைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்தல் போன்றவை நமக்கு தேவையாக இருக்கிறது.

அந்த வகையில் இந்த ரெயில்கள் பொருளாதார ரீதியில் மட்டுமின்றி சமூக ரீதியாகவும் மாற்றத்தை கொண்டு வரும். ஒரு பழமையான கனவை நிறைவேற்றும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள தைரியமான நடவடிக்கை இதுவாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி, மராட்டிய முதல்-மந்திரி தேவந்திர பட்னாவிஸ் உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கடலுக்கு அடியில் பாதை

மும்பை-ஆமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ள இந்த புல்லட் ரெயில் திட்டப்பணிகளுக்காக 825 ஹெக்டேர் நிலம் மட்டுமே தேவைப்படுகிறது. ஏனெனில் 92 சதவீத ரெயில் தடம் உயர்மட்ட பாதையாகவும், 6 சதவீதம் சுரங்கப்பாதையாகவும் அமைக்கப்படுகிறது. மீதமுள்ள 2 சதவீதம் மட்டுமே நிலத்தில் செல்கிறது.

மும்பையில் பொய்சார் முதல் பி.கே.சி. வரையிலான 21 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதில் 7 கி.மீ., முற்றிலும் கடலுக்கு அடியில் அமைகிறது. இந்த திட்டம் 2022-ம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 75-வது சுதந்திர தினத்தையொட்டி அந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி முதல் ரெயில் இயக்க அரசு விரும்புவதாக தெரிகிறது.

350 கி.மீ. வேகம்

இந்த பாதையில் அதிகபட்சமாக மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்கப்படும். இடையில் 12 இடங்களில் தலா 165 வினாடிகள் ரெயில் நின்று செல்லும். இதன் மூலம் பயண நேரம் சுமார் 3 மணி (தற்போது 7 மணி) நேரமாக குறையும்.

இந்த பாதையில் ஆரம்ப காலத்தில் நாளுக்கு 70 முறைகள் என 35 புல்லட் ரெயில்கள் இயக்கப்படும். பின்னர் படிப்படியாக அதிகரித்து 2050-ம் ஆண்டு வாக்கில் 105 ரெயில் கள் வரை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் இந்திய ரெயில்வே மற்றும் ஜப்பானின் ஷின்கன்சன் கூட்டுத்தொழில்நுட்பத்தில் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog