Breaking

Friday

பிரதியமைச்சர் ஹரீஸிடம் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் விடுக்கும் அவசர வேண்டுகோள்..!


காரைதீவு நிருபர் சகா

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஏற்படுத்தப்படுவது
தொடர்பில் கல்முனைக்குடி மக்கள் மத்தியில் பரப்பப்படும் தப்பபிப்பிராயங்களை
போக்கி, வீண் தடங்கல்களை தகர்த்தெறிவதற்கு பிரதியமைச்சர் எச்.எச்.எம்.ஹரீஸ்
முன்வர வேண்டும் என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற
கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ் எம்.ஐ.ஏ.ஜப்பார்
அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"சாய்ந்தமருது மக்கள் என்றும் எப்பொழுதும் யாருக்கும் விரோதமாகவோ இன்னொருவரின்
உரிமைகளை பிடுங்கியெடுத்து வாழ்ந்த வரலாறுகளோ இல்லை. பரிபூரண
விட்டுக்கொடுக்கும் உபகாரங்களையே அவர்கள் கடந்த காலங்களில் செய்து
காட்டியுள்ளனர். சாய்ந்தமருது மக்கள் பிரதேசவாதம் கடந்து பலமுறை உங்களுக்கு
வாக்களித்துள்ளார்கள்.

"நான்கு பிரிப்பு செய்து கல்முனையை கூறுபோட வேண்டாம், சாய்ந்தமருதுக்கு
மாத்திரம் கொடுங்கள், ஆட்சேபம் இல்லை என்று முன்னர் எழுப்பப்பட்ட கோஷம்
இப்போது சாய்ந்தமருது தனியாக பிரிகிறபோது நான்கு பிரிப்புதான் செய்யப்பட
வேண்டும் என அடம்பிடிப்பதானது சாய்ந்தமருதுக்கு எந்த வகையிலும் எக்காலத்திலும்
உள்ளூராட்சி மன்றம் கிடைத்து விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு பகிரங்கமாக
சொல்லும் சதி தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளதாக உணர்கிறோம்.

நீதி தர்மமாக நடக்கவேண்டிய கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசல் தலைமையினை ஒரு
முழு ஊருக்கும் எதிராக திசைதிருப்பி விடுகின்றனர். தற்போது சாய்ந்தமருது
உள்ளுராட்சி மன்றத்திற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகவுள்ள இந்த தருணத்தில்
அதற்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் குறுக்கே நின்று தடை போட முனைவதும்
புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவிக்கும் பிரதேசவாத
கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க அந்த மக்களை
பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நீங்கள்
அவசரமாக முன்வர வேண்டும்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடந்த 13 ஆம் திகதி நடைபெற்ற
நிகழ்வொன்றின்போது "சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்ச்சி மன்றம் விரைவில்
மலரப்போகிறது" என்று நீங்கள் பிரஸ்தாபித்தது கல்முனைக்குடி மக்களை அதற்கெதிராக
கிளர்ந்தெழ வைப்பதற்கான சமிக்சையா  என சந்தேகம் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை
ஏற்படுத்தியுள்ளது.

சாய்ந்தமருத்துக்கான தனி உள்ளூராட்சி மன்றத்தை நாங்களே கொண்டு வருகின்றோம்
என்று சாய்ந்தமருதில் அடிக்கடி கூறி வருகின்ற நீங்கள் அதில் உள்ள நியாயங்களை
ஏன் கல்முனைக்குடி மக்களுக்கு இன்னும் தெளிவுபடுத்தாமல் மௌனம் காத்து
வருகிறீர்கள்.

கல்முனைக்குடி மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்ற தப்பபிப்பிராயத்தை களைந்து
அவர்களது அச்சத்தை போக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உங்களுக்கே இருக்கிறது.

இல்லை, சாய்ந்தமருத்துக்கான தனி உள்ளூராட்சி மன்றம் ஏற்படுத்தப்படுவதால் அது
கல்முனை நகருக்கும் கல்முனைக்குடி மக்களுக்கும் பாதகமாக அமைந்து விடும் என்று
நீங்கள் கருதினால் அதையாவது சாய்ந்தமருது மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.

சாய்ந்தமருது பிரிக்கப்பட்டதற்கு பின்னரான கல்முனை மாநகர சபையின் வாக்காளர்
தொகையானது கிட்டத்தட்ட முஸ்லிம்கள் 60 விதமாகவும் தமிழர்கள் 40 விதமாகவும்
இருக்கப்போகிறது. இந்நிலையில் கல்முனை முஸ்லிம்களிடம் இருந்து பறிபோகும் என்று
கருத்துக்கள் பரப்பப்பட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முனைவது எவ்வளவு
விஷமத்தனமானது என்பதை நீங்கள் அறியாமல் இல்லை.

அதிலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது வட்டார முறைப்படி
நடத்தப்படவிருப்பதால் கல்முனை மாநகர சபையின் கீழ் வருகின்ற தமிழ், முஸ்லிம்
வட்டாரங்கள் எண்ணிக்கைப்படி கல்முனையை முஸ்லிம்கள் கூடிய உறுப்பினர்களுடன்
ஆளுகைக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதிலை சந்தேகமில்லை.

இது பற்றிய தரவுகளுடன் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் வழங்குவதால்
களமுனைக்கு எவ்வித பாதிப்புமில்லை என்கிற நியாயங்களை கல்முனைக்குடி மக்களுக்கு
நீங்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்பதனை நாம் பகிரங்கமாக வேண்டுகோள்
விடுக்கிறோம்.

கல்முனை தொகுதியின் இரன்டு மிகப்பெரும் ஊர்களை பிரதேசவாதத்தினால் மூட்டிவிட்டு
குளிர்காய சில சக்திகள் சமூக வலைத்தளங்களில் வரிந்து கட்டிக்கொண்டு
களமிறங்கியுள்ள சூழ்நிலையில் நீங்கள் இந்த தொகுதியின் அரசியல் தலைமைத்துவம்
என்கிற வகையிலும் சாய்ந்தமருது மக்களின் அதிகப்படியான மக்களாணையினை பெற்றவர்
என்கிற அடிப்படையிலும் நீங்களே அதனை முன்னின்று முறியடிக்க வேண்டும்.

பொறுப்புவாய்ந்த அரசியல் தலைமை என்ற ரீதியில் ஒவ்வொருவரும் தூய சாய்ந்தனையுடன்
நடக்க வேண்டியது காலத்தின் தேவை என்பதை இந்த இக்கட்டான சூழ்நிலையில்
உங்களுக்கு உணர்த்த கடமைப்பட்டுள்ளோம்.

ஆகையினால் தற்போது கல்முனையில் எரியும் பிரதேசவாத நெருப்பினை அணைத்து
சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால அபிலாஷை நிறைவேற நீங்கள் முழுமையான
ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்று உங்களை மன்றாட்டமாக
கேட்டுக்கொள்கின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog