Breaking

Thursday

அதிசயமான பிறவி :அற்புதமான துறவி மதியுகி மத்தியு அடிகளார் மறைந்து இன்று (07.06.2017) வருடம் பூர்த்தி.


மதியுகி மத்தியு அடிகளார் மறைந்து இன்று (6.7.2017) வருடம் பூர்த்தி!
கம்பளையில் பிறந்து கல்முனையில் காவியமான  மதியூகி மத்தியு அடிகளார் !

நாடறிந்த கல்விமான் எழுத்தாளர் கலாநிதி அருட்சகோ.எஸ்.ஏ.ஜ.மத்தியு அடிகளார் தனது 77வது வயதில் இறைபதமடைந்து இன்றுடன் ஒரு வருடமாகின்றது. கல்முனை பற்றிமாக்கல்லூரி என்றால் பிறதர் மத்தியு என்று சொல்லுமளவிற்கு இன்றும் நீங்காத இடத்தை மக்கள் மனதில் விதைத்தவர் அவர். 

பற்றிமா பழையமாணவர்சங்கச்செயலாளரும் கல்முனை றோட்டரிக்கழகத்தின் முன்னாள் தலைவருமான பொறியியலாளர் ஹென்றிஅமல்ராஜ் நேற்று இந்த ஒருவருட பூர்த்தியை ஞாபகப்படுத்தினார். அதன்பலனாக இக்கட்டுரை பதியப்படுகினறது.

இயற்கை எழில் கொஞ்சும் மலையகத்தில்  கம்பளையில் 1939ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி பெரிய சந்தனம் மிக்கேல்சேர்வை அக்னேஸ் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த அருட்சகோதரர் கலாநிதி எஸ். ஏ. ஐ. மத்தியூ அடிகளார் கல்முனையில் கல்விப் புரட்சி செய்த சிறந்த அதிபர் என்ற பெயரை கல்விஉலகில் பதித்துக்கொண்டார்.


அதிசயமான பிறவி அற்புதமான துறவி என புகழாரம்சூட்டக்கூடிய  கல்விப் பணி இறை பணிகலைப்பணி சமூகப் பணியென செய்த பணிகளை செம்மையாகச் செய்த செம்மல் அருட்சகோதரர் கலாநிதி எஸ். ஏ. ஐ. மத்தியூ.இன மத மொழி பேதமற்ற மனித நேயன் அன்பும் அரவணைப்பும் உயர்ந்த ஆளுமையும் நேரிய திட்டமிடலும் சீரான தலைமைத்துவமும் முற்போக்கு சிந்தனையும் கொண்ட மனிதர்.

புதுயுக புதுமை விரும்பியும் இயல் இசை நாடக விற்பன்னரும் தடைகளை மதி நுட்பத்தால் தகர்த்தெறியும் தீரமும் மிக்க பல்துறை ஆளுமையாளர். இந்த மேன்மைகளுடன் எம் மத்தியில் வாழ்ந்த பெருமகன் கலாநிதி அருட்சகோதரர் எஸ். ஏ. ஐ. மத்தியூ எம். மத்தியில் இருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டார்.


கல்வி நிலையில் கலைப்பட்டதாரியாகவும் இறையியல் டிப்ளோமாதாரியாகவும் பட்டக் கல்வி டிப்ளோமா கல்வி முதுமாணி முனைவர் போன்ற பட்டங்களைப் பெற்ற அவர் சிறந்த ஒரு பல்பரிமாணமுள்ள ஆளுமையாளர்.

கல்முனையில் உள்ள புகழ்பூத்த கல்லூரியாக விளங்கும் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலையில் ஐந்து ஆண்டுகள் ஆசிரியராகவும் 1978ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டுவரை 22 வருட காலம் அதிபராகவும் பதவி வகித்தவர். பின்னர் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் முதலாவது வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக பதவி வகித்தவர். பின்னர் அதனைத் தூக்கி எறிந்து விட்டு வந்தவர்.

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் முதலாம் தரத்தில் இருந்த அன்னார் கல்வி டிப்ளோமாதாரிகளுக்கான விரிவுரையாளராக பணி செய்தவர்.அன்னாரிடம் பயின்வர்களுள் நானும் ஒரு மாணவன்.

விழாக்கள் நிகழ்ச்சிகள் என்றால் நேரத்திற்கு ஆரம்பித்து நேரத்திற்கு முடிக்கும் ஆளுமை அவரிடமிருந்தது.

'பின்பு என்ற பாதையில் சென்றால் இல்லை என்ற ஊர்தான் வரும்' என்ற வாசகத்தையும் 'இன்றே செய் அதை நன்றே செய்' என்ற வாசகத்தையும் தனது அதிபர் அலுவலகத்தின் முன்னால் பொறித்து கல்விப் பணியாற்றிய சிங்கம்.

'கல்வியில் முழுமை கல்விக்கான அர்ப்பணிப்பு' என்பதில் உறுதியுடன் செயற்பட்டவர். இதனால் உலகம் பூராகவும் அன்னாரின் மாணவர்கள் சகல துறைகளிலும் வியாபித்துள்ளனர்.


'அன்பினில் மலர்ந்த அமர காவியம்' (1974) இன்ப மரணம் (1958) அன்பு இல்லாவிட்டால் (1970) போன்ற பல நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி மேடையேற்றி நாடகத்துறையில் மனநிறைவு கண்டவர்.

தமிழர்களும் முஸ்லிம்களும் பின்னிப் பிணைந்து வாழும் கல்முனை மண்ணில் இன ஐக்கியம் காத்திட அயராது உழைத்த சமாதான வேந்தர் அருட்சகோதரர் கலாநிதி எஸ். ஏ. ஐ. மத்தியூ அடிகளார்.கல்முனையி என்றும் மறக்காத டாக்டர் முருகேசபிள்ளைக்கு இவர் எடுத்த விழா வரலாற்றில் இடம்பெற்றது.எதனையும் திட்மிட்டு நேர்த்தியாக சிறப்பாக பலரும் வியக்கதத்தக்கவகையில் செய்வார்.

தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் சரளமாக பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டவர். தனது இறுதி மூச்சுவரை புத்தகங்களையும் சஞ்சிகைகளையும்இபத்திரிகைகளையும் படித்து சுவைத்த பண்பட்ட வாசகன்.

கல்முனை ரோட்டரிக் கழகத்தின் தலைவராகவிருந்தும் கல்முனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவில் இருந்தும் சிறந்த சமுதாயப் பணி செய்தவர்.

தனது மாணவர்களை மட்டுமன்றி ஏனையோரிடமும் காணப்படும் திறமைகளை கேள்வியுற்றவுடன் அவர்களின் வீடு தேடிச் சென்று பாராட்டுவது அவருக்குள்ள தனிச் சிறப்பு.

இதுவரை 54 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இறுதியாக அவர் இரசாயன ஆசிரியை தங்கராசா நேசராணி எனும் இரசாயனவியல் ஆசிரியைக்கு நூலொன்றை வெளியிடுவதற்கு பொறியியலாளர் கணேசின் ஒத்துழைப்புடன் நூலாக்கம் செய்துவிட்டார். ஆனால் வெளியிடமுன்பு காலன் அவரை கவர்ந்துவிட்டான்.

இருந்தபோதிலும் பொறியியலாளர் கணேஸ் அந்தப்பணியை தமிழரசுக்கட்சின் தலைவர் மாவைசேனாதிராவைக்கொண்டு சிறப்பாக நடாத்திமுடித்தார்.


 பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி!
கடந்த வருடம் 2016 யூன் மாதம் 6ஆம் திகதி  மரணித்த அவரின் பூதவுடலுக்கு மறுநாள்    பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தியமை அவரது ஆளுமைக்கு எடுத்துக்காட்டாகும். 

அவர் அதிபராகவிருந்த கல்முனையின் புகழ்பூத்த கல்முனை கார்மேல பற்றிமா தேசிய கல்லூரியில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வு காலை 10மணிமுதல் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னாள் அமைச்சர் பி.தயாரத்னா கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் அம்பாறை மாவட்ட சர்வமத அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் பாராளுமன்ற உறுப்பினர் எ.கே.கோடீஸ்வரன் கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஆரிப்சம்சுதீன் மற்றும் கல்வியியலாளர்கள் அரசியல்பிரமுகர்கள் அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பொதுமக்கள் அபிமானிகள் என்று பல்லாயிரக்கணக்கானோர் மலர்தூவி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

முக்கிய தலைவர்கள் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர்.
நீதிபதி இளஞ்செழியன் உரையாற்றுகையில்:
ஓர் அதிபர் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கு உதாரணபுருசராகத் திகழ்ந்தவர் சகோ.மத்தியு அவர்கள். அவர் கிழக்கிலங்கையின் நட்சத்திரம்.

யாழ்ப்பாணத்தில் ஹார்ட்லிக் கல்லூரி அதிபர் திரு.பூரணம்பிள்ளை எப்படி வடக்கில் ஜொலித்தாரோ அப்படி கிழக்கில் ஜொலித்தவர் அருட்சகோ.மத்தியு அவர்கள்.

உலகின் மூலைமுடுக்குகளில் இருக்கக்கூடிய அவரது மாணவர்கள் அபிமானிகள் அனைவருக்கும் இவரது மரணச்செய்தி நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். என்றார்.

முன்னாள் அமைச்சர் பி.தயராத்னா உரையாற்றுகையில்:
வாழ்க்கையில் சகோ.மத்தியு போன்ற பல்பரிமாண ஆளுமை மிக்க அதிபரை நான் காணவில்லை. எதனையும் திட்டமிட்டு ஒழுங்காக செய்வதில் அவருக்குநிகர் அவரே.

அவரது செய்தியைக் கேட்டதும் அவர் வீடுதேடி வந்து அஞ்சலிசெலுத்தினேன்.அன்னாரின் ஆத்தா சாந்தியடையப்பிரார்த்திக்கின்றேன். என்றார்.


ஊடகங்களையும்மனிதரையும்  பெரிதும் மதித்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக!அவர் உலகிற்கு உதாரண புருசராகவாழ்நதவர். ஓம் சாந்தி சாந்தி 

விபுலமாமணி  வி.ரி.சகாதேவராஜா

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog