Breaking

Monday

மர்ஹும் அஷ்ரஃப் அன்று சொன்னார்..! வேட்பாளர்களை 'ஆவி' உருவில் தாக்கல் செய்தே.


 தொடர்-01
===========================
ஒரு காலம் இருந்தது.
காங்கிரஸுக்கு வேட்பாளர்கள் எங்கே என்று தேடும் நிலை.
பேசிக் கொண்டிருந்தாற்போலவே கூட்டங்களிலிருந்து மெதுவாக நழுவியிருப்பார்கள்; பயம் ; உயிர் பயம்!

வேட்பாளர்களை 'ஆவி' உருவில் நியமனப்பத்திரங்களில் தாக்கல் செய்தே, காங்கிரஸுக்கு உயிர் கொடுத்தவர் அஷ்ரஃப்.
சுடுவதாக இருந்தாலும் வேட்பாளர்கள் இல்லை.
எல்லோரும் 'ஆவி' உருவில் இருந்தார்கள்.
ஒரே ஒருவரைத் தவிர. அவர் காங்கிரஸின் தலைவர்.

இன்னொரு காலம் வந்தது.

வேட்பாளர்கள் 'நான் முந்தி, நீ முந்தி' என வந்து கொண்டே இருந்தார்கள்.
அந்த கட்சி, இந்தக் கட்சி என்று எந்தக் கட்சியிலும் டிக்கட் கிடைக்காதவர்கள் ஒரு நிரை.

காங்கிரஸுக்கு உழைத்தவன், உழைக்காதவன் என்று, 'விருட்ச வளர்ச்சியில் கனி பறிக்க வந்தவர்கள் ஒரு நிரை.

நெருக்கமானவர்கள், அற்றவர்கள் என்று சிபாரிசுகளைத் தாங்கியும் ஒரு நிரை.
இத்தனையும் கடந்து -
முடிவுகள் எட்டப்படவும் வேண்டும். ஆனால், முடிவுகள் எட்டப்படுகையில் -
சில வழுக்கல்கள்;  சில சறுக்கல்கள்; சில நழுவல்கள் என நிகழத்தான் செய்யும்;

அவை நிகழ்ந்தும் விட்டன.

1988களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்ட ரீதியாக அங்கீகாரம் பெற்றது.
சட்டரீதியான அங்கீகாரம் என்பது, இதுவரை காங்கிரஸுக்குத் திறக்காத பல அரசியல் இரும்புகு கதவுகளை திறக்கச் செய்தது.
அன்றிரவே -

அஷ்ரஃப்புக்கு இந்திய தூதுவராலயத்திலிருந்து 'கோல்' வந்தது.
தூதுவர் டிக்ஷித் பேசினார்.
"எனது கதவுகள் இனி உங்கள் வரவுக்காக காத்திருக்கும்"

இதற்கு முன் -

டிக்ஷித் குழுவினருடன் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.
முஸ்லிம்கள் பற்றிய நிலைப்பாட்டில்,
அவர்களிடம் எவ்வித மாற்றங்களும் தோன்றவில்லை.

அஷ்ரஃப் -
'அவர்களுடைய கருத்துக்களை எதிர்க்கின்றேன் என்று நான் ஒதுங்கியிருக்க முடியாது.
இருக்கும் நிலவரத்தைக் கொண்டு நமது குரலை எவ்விதம் எழுப்பலாம் என்று மட்டுந்தான் யோசிக்க முடியும்'

டிக்ஷித் குழு -
முஸ்லிம்களை வெறுமனே ஒரு தமிழ் பேசும் மக்கள் கூட்டமாகவே கணித்தது.
முஸ்லிம் மக்களுக்கான கோரிக்கைகள் கூட அதே பார்வையின் கீழ்தான் அவதானிக்கப்பட்டன.
எந்த வகையிலும் டிக்ஷித் தரப்பு காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்டதாக காணப்படவில்லை.

இந்தியா - இலங்கை அரசுகள் வட கிழக்கின் தேர்தலுக்கு ஜனநாயக ரீதியான ஒரு சூழலைத் தோற்றுவிக்க முயன்றன.

இச்சந்தர்ப்பத்தில் -
டிக்ஷித் அஷ்ரஃப்புடன் பேசினார்.

"வடகிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடக்கப் போகிறது...
நீங்களும் கேளுங்கள்..."

அந்தப் பேச்சில் சவால் விடும் தொனி இருந்தது, அஷ்ரஃப் அதை ஏற்றுக் கொண்டார்.

"ஒரே ஒரு நிபந்தனை... பணம் மட்டுமில்லாமல்,
வேறு ஏதாவது கேளுங்கள்... தருவோம் -
பாதுகாப்பு, பயணத்துக்கு ஹெலி, எரிபொருள் வசதி..."

"நன்றி! இருந்தாலும் நான் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்துப் பேசமாட்டேன்.
அதை விமர்சிக்கவே செய்வேன். ஐ.பி.கே.எப். ஐக் கூட அதன் அடாவடித்தனங்கள் பற்றி விமர்சிக்க வேண்டியிருக்கும்.
இது என்னுடைய தனிப்பட்ட உரிமை. இதற்கு தடை போடுவீர்களா...?"

"நிச்சயமாக இல்லை....!"

எதிர்முனயில் ஒரு அமர்த்தலான சிரிப்பு.

        (தொடரும்!)

எம்.என்.எம்.யஸீர் அறபாத்,
  ஓட்டமாவடி(கல்குடா),

(அஷ்ரஃப் பெருக்கெடுத்த கதைகள் நூலில் இருந்து...)
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog