Breaking

Thursday

கிழக்கு - கொட்டும் மழையிலும் பட்டதாரிகள் போராட்டம்....


(எம்.ஜே.எம்.சஜீத்)

பட்டதாரிகளின் போராட்டமானது இன்று தேசிய பிரச்சினையாக மாறியுள்ளது. குறிப்பாக பட்டதாரிகளின் பிரச்சினைகளை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராது அரசியலுக்கப்பால் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.

அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையறையற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் 3வது நாளாகவும் நேற்று (01) காரைதீவில் இடம்பெற்றது. நேற்று மாலை அங்கு சென்று பட்டதாரிகளைச் சந்தித்து கலந்துரையாடிய போதே உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் காரைதீவு சந்தியில் கொட்டும் மழை என்று பாராது பட்டதாரிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

நியமனங்களை விரைவாக வழங்கு அரசே, பட்டம் முடிந்தும் போராட்டம் முடியவில்லை, அமைச்சர்களே ஊழல் வேலைவாய்ப்புக்களை உடனடியாக நிறுத்து, போராட்டமே வாழ்க்கை வாழ்க்கையே போராட்டம், பட்டம் பெற்றவர்கள் வீதியில் நிற்க பல்கலைக்கழகம் எதற்கு என பல பதாதைகளை வேலையற்ற பட்டதாரிகள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் காலவரையறையற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.






செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog