Breaking

Wednesday

எல்லை நிர்ணயம் தமிழ் முஸ்லிம் சமூகங்களை பாதிக்கும் வகையில் அமைந்து விடக் கூடும் என்பதில் பெரும் அச்சம்.


எல்லை நிர்ணயம் தமிழ் முஸ்லிம் சமூகங்களை பாதிக்கும் வகையில் அமைந்து விடக் கூடும் என்பதில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.


2017.02.25ஆந்திகதி-சனிக்கிழமை மாலை அவரது காத்தான்குடியிலுள்ள அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் மக்கள் பிரதி நிதிகளுக்கு எதுவும் தெரியாமலுள்ளது. எல்லை நிர்ணயம் சிறுபான்மை சமூகங்களை பாதிக்கும் வகையில் அமைந்து விடக் கூடும் என்பதில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு குறைந்த பட்சம் அதன் பிரதியொன்றை மக்கள் பிரதி நிதிகளுக்கு காண்பிக்க வேண்டும். எல்லை நிர்ணய விடயத்தில் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை சிறுபான்மை சமூகமான தமிழ் முஸ்லிம் மக்கள் பிரதி நிதிகளுக்கு காண்பிக்க வேண்டும்.

இது வரை அந்த எல்லை நிர்ணய அறிக்கையின் பரிந்துரைகள் எதுவும் மக்கள் பிரதி நிதிகளுக்கு காண்பிக்கப்படவில்லை.

அவசரப்பட்டு புதிய முறையில் இந்த எல்லை நிர்ணய அறிக்கையை வைத்து தேர்தலை நடத்தாமல் பழைய விகிதாசார முறைப்படி தேர்தலை நடத்துவது சிறந்ததாகும் இந்த எல்லை நிர்ணய அறிக்கையை சரி செய்து கொண்டு பின்னர் புதிய முறைப்படி தேர்தலை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்று சேர்ந்து தீர்வுக்கான அரசியல் முன் மொழிவை முன் வைக்க வேண்டும்
புதிய அரசியல் யாப்பு திருத்தம் ஏற்பட உள்ள நிலையில் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்று சேர்ந்து தீர்வுக்கான முன் மொழிவை முன் வைக்க வேண்டும். அது சிறந்த தீர்வாக அமையும்.

இதற்காக தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் தமிழ் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றினைந்து இதற்கான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.

இது தொடர்பில் பொதுவான விடயங்களில் தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒப்பந்தங்களை ஏற்படுத்த வேண்டி ஏற்பட்டாலும் அதனை மேற் கொள்ள வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை முன் வைத்துள்ள அரசியல் முன் மொழிவு தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம்கள் தொடர்பில் எதனை முன் வைத்துள்ளார்கள் என்பதை பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் காலத்தில் அந்த தீர்வு கிடைக்கப் பெறல் வேண்டும்.

தீர்வு ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் புதிய அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்பட்ட பின்பு தமிழ் முஸ்லிம் சமூகங்களான இரண்டு சமூகங்களும் கைசேதப்பட வேண்டிய நிலை ஏற்பட சிறுபான்மை சமூகமான தமிழ் முஸ்லிம் சமூகமான நாங்கள் காரணமாக இருந்து விடக் கூடாது.

இது தொடர்பில் இரண்டு சமூகங்களும் அவசரமாக பேச வேண்டும். இதில் தமிழ் முஸ்லிம் சமூகங்களான சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாசைகள் உள்ளடக்கப்படல் வேண்டும்.

இலங்கையின் அரசு மாறினாலும் அரசியல் முறைமைகள் அரசியல்; கலாசாரம் மாறவில்லை ஏனெனில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அசர நியமனம் வழங்க கோரி மட்டக்களப்பில் தொடர்ந்து சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

பத்து இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக இந்த நல்லாட்சி அரசாங்கம் கூறியது ஆனால் அது இதுவரை இடம் பெறவில்லை.

கடந்த அரசாங்கம் அபிவிருத்திக்காக ஒரு கிராமத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து கிராமங்களை அபிவிருத்தி செய்தது. இந்த நல்லாட்சி அரசாங்கம் அதனை ஐந்து இலட்சமாக குறைத்துள்ளது.

ஒரு கிராமத்திற்கு ஐந்து இலட்சமாக இந்த அரசாங்கம் குறைத்துள்ளதானது அபிவிருத்தியில் மந்த கதியை காட்டுவதாக தெரிகின்றது.

கடந்த காலத்தில் யுத்தத்தத்தை காட்டி அபிவிருத்திக்கு நிதியில்லை என்று கூறுவது இன்று செய்ய முடியாது. இன்று யுத்த மில்லை இதனால் யுத்தத்துக்கு செலவு செய்த பணத்தினை அபிவிருத்திக்கு செலவு செய்ய முடியும். ஆனால் இந்த அரசாங்கம் அப்படி செய்ய வில்லை

இதனால் இந்த நல்லாட்சி அரசாங்கத்தினை ஏற்படுத்திய மக்கள் அதற்கு ஆதரவளித்தவன் என்ற வகையில் எங்களிடமும் கேள்வி கேட்கின்றனர் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog