Breaking

Saturday

வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்ற முடியாது! – ஆளுனர்



வடக்கில் அதிகளவில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற தமிழர் தரப்பின் கோரிக்கையை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நிராகரித்துள்ளார். தேசியப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வடக்கில் தொடர்ந்தும் இராணுவம்

 நிலைகொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றும், வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால் தெற்கிலுள்ள இராணுவ முகாம்களும் அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த வட மாகாண ஆளுநர், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஏழரை ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் வடக்கு, கிழக்கில் அதிகளவில் நிலைகொண்டுள்ள படையினரை அகற்ற வேண்டும் என்று தமிழர் தரப்பால் தொடர்ச்சியாக விடுக்கப்படும் கோரிக்கை நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

“இராணுவ முகாம்கள் நாட்டில் இருக்க வேண்டியது அவசியம். அவை பொது மக்களின் வீடுகளிலும், தனியார் காணிகளிலும் இருக்கக்கூடாது. இந்த காணிகளை எமது இராணுவமா கைப்பற்றியது? இல்லை. பயங்கரவாதம் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தக் காணிகள் கைமாறப்பட்டன. புளொட்

, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் காணப்பட்டன. போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்த இயக்கங்கள் மக்களின் காணிகளிடையே நின்றும், அரண்களில் இருந்தும் தாக்குதல்களை நடத்தினார்கள்.

தென்மாகாணத்தில் கரையோரப் பகுதிகளை போர்த்துக்கேயர்களே முதலில் கைப்பற்றினார்கள். அதன் பின்னர் ஒல்லாந்தரும், அதற்கடுத்து பிரித்தானியரும் கைப்பற்றினர். ஆனால் அந்த இடம் யாருடையது? போர்த்துக்கேயரிடம் இருந்தே இந்த காணிகளைப் பெற்றோம் என ஒல்லாந்தருக்கு கூற முடியாது. அதேபோலதான் பிரித்தானியரும்.

போரின் இறுதியாக இந்தக் காணிகள் இராணுவத்தினரே கைப்பற்றினர். மாறாக இராணுவம் ஒவ்வொருவருடைய வீடுகளிலும் சென்று தங்கவில்லை. விடுதலைப் புலிகள் சில சந்தர்ப்பங்களில் அரண்களில் அல்லாமல் மக்களது வீடுகளுக்கு இடையே நின்றே தாக்குதல்களை நடத்தியதோடு மக்களின்

 காணிகளை இயக்கமே கைப்பற்றியிருந்தது. போரின் பின் அவை ஒவ்வொன்றான இராணுவம் கைப்பற்றியிருப்பதோடு அவற்றை உரிமையாளர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அவர்களது காணிகள், வீடுகளை மீள வழங்குவதன் அர்த்தம் இராணுவ முகாம்களை அகற்றுவது அல்ல.

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவதாயின் தெற்கிலும் முகாம்கள் அகற்றப்பட வேண்டும். எனினும் வடக்கிலும், தெற்கிலும் இராணுவ முகாம்கள் இருந்தே தீர வேண்டும். தேசிய பாதுகாப்பு, தேசிய இறைமைக்கு இராணுவ முகாம்கள் காணப்படுவது 

அவசியம் என்றே அரசாங்கத்தின் கொள்கை. அத்துடன் இந்தியாவிலிருந்து கேரளா கஞ்சா கடல் மார்க்கமாகவே வடக்கிற்கு கடத்தப்படுகிறது. இந்த நிலையில் அவற்றை தடுப்பதற்கு கடற்படை அங்கு இருக்க வேண்டும். – என்றார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog