Breaking

Saturday

நீதி அமைச்சர் அவர்களே! இதில் என்ன நீதி இருக்கிறது?


★ஜெம்ஸித் அஸீஸ்★

இலங்கையின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக நீதியமைச்சர் இன்று (18.11.2016) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு பழைய செய்தி குறித்து பேசியிருக்கிறார் நீதி அமைச்சர்.

முஸ்லிம் சமூகம் அந்த செய்தி குறித்து தெளிவான பதிலை கடந்த வருடமே தெரிவித்து விட்டது.

அது தொடர்பான உண்மை நிலை ஆராயப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டாயிற்று

32 பேர் அல்ல. ஒரு சிலரே அதில் தொடர்புபட்டவர்கள் என்ற உண்மையை நாட்டின் புலனாய்வுத் துறை அறிந்து வைத்திருக்கும்.

23.07.2015 அன்று IS (ISIS) மற்றும் தீவிரவாதம் பற்றிய இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுப் பிரகடனமொன்று தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டது.

“அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் 22.07.2015 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நாம் சகலவிதமான தீவிரவாத செயற்பாடுகளையும் அநியாயங்களையும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்” என்று ஆரம்பிக்கிறது அந்தப் பிரகடனம். அதிலிருந்து ஒரு சில பகுதிகள்

“IS (ISIS) போன்ற இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் தீவிரவாத அமைப்புகளோடு எவராவது தொடர்புபட்டால் நாம் அதனை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றௌம். இவ்வாறான அமைப்புகளுக்கும் இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதையும் உறுதியாகக் குறிப்பிடுகின்றோம்.

எவராவது ஒரு தனிநபர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுக் கொள்கின்றௌம். எமது நாட்டை இவ்வாறான சமூகத்துக்கு எதிரான தீய செயல்களிலிருந்து பாதுகாப்பதற்காக அரச நிறுவனங்களுக்கு எமது உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

மேலும், ஊடகங்கள் இது சம்பந்தமான விடயங்களில் ஈடுபடும் போது பொறுப்புணர்வுடனும் பக்கச்சார்பு இல்லாமலும் ஈடுபட வேண்டும். ஊடகங்கள் இவ்வாறான விடயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது திரிபுபடுத்தல் மற்றும் பிழையான செய்திகளை சமூகத்துக்கு வழங்குதல் போன்ற சமூக ஒற்றுமையையும் சகவாழ்வையும் பாதிக்கின்ற செயற்பாடுகளையும் முற்றாகத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களாகிய நாம் எமது தாய் நாட்டில் பல நூற்றாண்டுகளாக நாட்டுப் பற்றுடனும், ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும், சகவாழ்வுடனும் வாழ்ந்து வருகின்றோம். மேலும் எமது தாய்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளிலும், இலங்கையின் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளிலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என்பதையும் உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம்.”

நீங்கள் இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புக்கள் உட்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்துதான் அந்தப் பிரகடனத்தை வெளியிட்டு வைத்தது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அவை வருமாறு:

All Ceylon Jamiyyathul Ulama (ACJU)

Muslim Council of Sri Lanka (MCSL)

Sri Lanka Jamat e Islami (SLJI)

Jama’athus Salama (MFCD)

Jamiyyathus Shabab (AMYS)

Al-Muslimath

International Islamic Relief Organization (IIRO)

World Assembly of Muslim Youth (WAMY)

All Ceylon YMMA Conference (YMMA)

Thableegh Jama’ath

All Ceylon Thowheedh Jama’ath (ACTJ)

Colombo District Masjid Federation (CDMF)

நாளை அனைத்துப் பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகும் உங்கள் உரை.

மக்கள் அஞ்சுவார்கள். ஆவேசப்படுவார்கள்.

இனவாதிகள் நெருப்பை கக்குவார்கள். விஷமும் பாய்ச்சுவார்கள்.

சமூக வலைத்தளங்கள் வசைபாடும். உள்ளங்களில் கறை படியும்.

இதனால் இன விரிசலைத் தவிர, பரஸ்பரம் பகையைத் தவிர வேறு என்ன நடந்து விடப் போகிறது.

இப்படியிருக்க ஒரு பழைய செய்தி குறித்த உங்கள் இன்றைய உரையின் பின்னணிதான் என்ன?

வேண்டுமென்றா?

இல்லை இன்றுதான் அந்த செய்தி உங்களுக்குக் கிடைத்ததா?

அல்லது அரசியல் இலாபம் தேடும் முயற்சியா?

????????????????

நீதி அமைச்சர் அவர்களே! இதில் என்ன நீதி இருக்கிறது?

★ Jemsith Azeez ★
18.11.2016
majemsith83@gmail.com
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog