Breaking

Wednesday

அருமையான ஒரு சுய விமர்சனம்..!


– முஹம்மத் பகீஹுத்தீன் –

ஊடகங்களில் சுய விமர்சனம் என்பதை காண்பதே அரிது. அதுவும் அறபுலக பொறுப்பு வாய்ந்த ஒரு தலைவர் மக்கள் மத்தியில் பகிரங்கமாக குறை நிறைளை வெளிப்படையாக பேசியிருப்பது அபூர்வமான ஒரு வரலாற்று நிகழ்வு.

அது வேறு யாருமல்ல ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் காலித் மிஷ்அல் அவர்கள் தான். அவர் துணிச்சலுடன் சில கருத்துக்களை சுய விமர்சனமாக முன்வைத்துள்ளார்.

அல்ஜஸீராவின் ஆராய்ச்சி மற்றும் கற்கைகளுக்குமான மையம் ஏற்பாடு செய்த உரையாடல் அமர்வில் பல அறபுலக புத்திஜீவிகள் பங்கேற்றனர். அதில் காலித் மிஷ்அல் அவர்கள் காஸாவில் இடம்பெறும் ஹமாஸின் போராட்ட அனுபவத்தை மாத்திரம் சுய விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக அரபு வசந்தத்தின் போது இஸ்லாமிய அமைப்புக்களின் நிலைப்பாடுகள் குறித்தும் பகிரங்கமாக பல கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

உண்மையில் இது மிகுந்த பயனுள்ள ஒரு கருத்தாடல். காலத்திற்கு தேவையான ஒரு விமர்சனம். இஸ்லாமிய நிறுவனங்கள், அமைப்புக்கள், அரசியல் பிரவுகள் மற்றும் முன்னேற்றம் நோக்கி பயணிக்கும் சகலரும் முன்னுதாரணமாக எடுக்கவேண்டிய நிகழ்வாக இதனை பார்க்கவேண்டும்.

காலித் மிஷ்அல் பலஸ்தீன் குறித்தும், ஹமாஸ் மற்றும் பத்தாஹ் ஆகிய இரு குழுக்கிடையிலான உறவுகள் பற்றியும் இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பான மாற்றங்கள் பற்றியும் கூறிய கருத்துக்களின் சுருக்கத்தை இங்கு தருகின்றோம்.

அரபு வசந்தத்தின் போது இஸ்லாமி இயக்கங்களை சார்ந்தவர்கள் இரண்டு தவறுக்கு உட்பட்டுவிட்டார்கள்.

ஒன்று: தங்களின் இயல்திறன்கள் பற்றிய மிகையான மதிப்பீடு. பாதிக்கப்பட்ட சக்திகளின் எதிர்வினைகள் உள்ளுரிலும் பிராந்தியத்திலும் எப்படி இருக்கும் என்பதில் தப்பு கணக்கு போட்டதாகவே அதன் பொருள்.

இஸ்லாமிய அமைப்புக்கள் நம்மால் முடியும் என்னற அதீத நம்பிக்கையில் இறங்கியதால் எதிரிகள் எப்படி எப்படியெல்லாம் தாக்குப்பிடிப்பார்கள் என்பதை மதிப்பிட தவறி விட்டார்கள்.

களத்தின் துள்ளியமான புள்ளிவிபரம் அறியாததாலும் அனுபவம் போதாமையாலும் தம் பலத்தில் மாத்திரம் நம்பிக்கை கொண்டதாலும் இஸ்லாமியவாதிகள் எதிரிகளிடத்தில் எமாற்றம் கண்டார்கள்.

இரண்டாவது தவறு: தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் ஈடுபாடுள்ள ஏனையவர்களுடான உறவை கையாளும் முறையில் காணப்பட்ட பலவீனமாகும்.

இதனைப் புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்வதாயின் தேர்தலின் போது பெரும்பான்மை வாக்குகளை மட்டும் பெற்றால் போதாது. அதிகப்படியான வாக்குகள் உண்டுதானே என நினைத்துக் கொண்டு தேசத்தை கட்டியெழுப்பும் போது தனித்து நின்று தீர்மானம் எடுத்தது பிழையான அணுகுமுறையாகும். ஏனைய சிவில் நிறுவனங்கள், அமைப்புக்களையும் கூட்டிணைத்துக் கொண்டுதான் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது இஸ்லாமியவாதிகள் மனங்கொள்ள வேண்டிய முக்கிய புள்ளியாகும்.

ஹமாஸின் தலைமையகம் டமஸ்கஸில் இருந்த காலத்தில் முக்கியமான பதஹ் உறுப்பினர் ஒருவர் ஹமாஸின் பணிமனைக்கு சந்திப்புக்காக வந்தார். அவரிடம் இனி எமது போராட்டத்தை தொடர பதஹ் அமைப்பு தேவயில்லை. ஹமஸ் மாற்றீடாக வந்துள்ளது. நாம் மாத்ததிரம் போரடாலாம் என்று கணக்குப் போட்டது தவறு என்பததை காலித் மிஷ்அல் இந்த இடத்தில் உதாரணமாக எடுத்துக் கூறினார். இப்படி பதஹ் அமைப்பம் ஹமாஸை பார்த்த சந்தர்ப்பங்ள் உண்டு. அன்று எமது அமைப்பு மாற்றீடாக வந்து இடைவெளியை நிரப்ப முடியும் என்றும் அவ்வாறு ஆட்சி செய்வது இலகுவானதே என்றும் கருதியிருந்தோம். அது தவறு என்று இன்று புரிகின்றோம்.

மிகச்சரியான அணுகுமுறை அதுவல்ல. மாறாக இணைந்து செயற்படுவதும் இணங்கிப் பயணிப்பதும் தான் உண்யமையில் சரியான வழிமுறையாகும். எனவே சுதந்திரமான தேர்தலுக்கு பின்னர் கூட்டிணைந்து தேசிய ரீதியில் இணங்கிப் போவது தவிர்க்க முடியாதது.

எனவே பலஸ்தீன் விவகாரத்தில் இந்த நடைமுறைக்கு வாருங்கள் என இரு தரப்பிடமும் மிஷ்அல் அழைப்பு விடுத்துள்ளார். எனவே ஹமாஸின் போராட்ட தீர்மானமும் பதஹ் அமைப்பின் சமரச தீர்மானங்களும் சங்கமித்து கூட்டாக உழைக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது.

காலித் மிஷ்அல் அவர்களின் திறந்த உரையாடல் பாராட்டுக்குரியது. அவரது சுய விமர்சனப் பார்வை வரவேற்கத்தக்கது. கட்டியெழுப்பும் வகையில் சிந்திப்பவர்கள் இந்தப் பாதையைதான் பின்பற்ற வேண்டும். உடைக்க விரும்புவர்கள் வந்த பாதையை திரும்பிப் பார்க்காமல் முன்னேறுவார்கள். அவர்களுக்கு முன்னால் அழிவுதான் முடிவாக வந்து நிற்கும். எனவே இஸ்லாமியவாதிகள் காலித் கூறிய கருத்துக்களை கண்டிப்பாக கருத்தில் எடுத்து பயணத்தை தொடர்வதே மிகவும் புத்திசாலித்தனம் என அறுதியிட்டு கூறலாம்.

by-meelparvai
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog